நீரழிவை போக்கும் குடிநீர்!

Pin It

தண்ணீர்

நமது உடலில் சுரக்கும் இன்சுலின் என்கிற ஹார்மோனின் அளவு குறையும் போது, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள குளுக்கோஸ் இரத்தத்தில் தேங்க ஆரம்பித்து விடும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதையே நீரழிவு என்கிறோம். பலரும் இதை ஒரு நோய் என்று குறிப்பிடுகின்றனர். நவீன மருத்துவமோ இதனை உடலில் ஏற்படும் ஒரு நிரந்தர குறைபாடு என்கிறது.

தொடர்ச்சியான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு,மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதனை கட்டுக்குள் வைத்திருக்கலாம். நிரந்தர தீர்வு என்று எதுவும் இதுவரை அறியப் படவில்லை. இத்தகைய நீரழிவு பற்றி நமது சித்தர் பெருமக்களும் கூறியிருக்கின்றனர்.

தேரையர் தனது “தேரையர் குடிநீர்” நூலில் இந்த நீரழிவிற்கு ஒரு தீர்வினை அருளியிருக்கிறார்.

தேற்றான் விதைக் கடுக்காய் செப்புமா வாரை வித்து
ஏற்ற விளம்பிசினோ டித்தனையும் – கோற்றொடியே
பங்கொன்று காலாய் கசிவின்மோ ரில் பருக
பொங்கிவரு நீரிழிவு போம்!
– தேரையர்.

தேற்றான் கொட்டை,கடுக்காய், ஆவாரம் விதை, ஆவாரன் பிசின் என்கிற இந்த நான்கு பொருட்களையும் சம அளவு எடுத்து நீர் விட்டு ஒரு பங்காக காய்ச்சி வடித்து இறுத்த இந்த நீருடன் ஒரு பங்கிற்கு கால்பங்கு பசுவின் மோர் சேர்த்து பருகிட நீரழிவு நீங்கும் என்கிறார்.

தினமும் இரு வேளை முப்பது முதல் அறுபது மில்லி லிட்டர் குடிக்கலாம். நானறிந்த வரையில் இந்த மருத்துவ குறிப்பின் நம்பகத் தன்மை ஆய்வின் மூலம் உறுதி செய்யப் படவில்லை. எனவே தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முயற்சிக்கலாம்.